இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் மனிதர்களின் கதைகளும் கதாபாத்திர தன்மைகளும் சற்று அந்நியமாக தெரியலாம். உங்களுக்குள் அதிர்வுகளை உண்டாக்கலாம். நீங்கள் கேட்டு பழக்கப்பட்ட கிராம சூழலும் அதன் கதைகளும் உங்களுக்குள் பொய்த்து போகலாம். கிராமம் என்றாலே அழகு நிறைந்த இயற்கை நிலப்பரப்பும், கள்ளம் கபடமற்ற மனிதர்களும் வாழுமிடம் என்ற பொது சிந்தனை தகர்க்கப்பட்டு அந்த நிலப்பரப்பில் வாழும் சில கொடுமையான மனித குணங்கள் உங்கள் நிம்மதியை சற்று கெடுக்கலாம்.
அறியாமையும், சுயநலமும், வர்க்க பாகுபாடும் பொருந்திய, ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்றார்போல் மாந்தர்களை உள்ளடக்கிய இடமாகத்தான் கிராமங்கள் இன்றளவும் இருக்கிறது. இந்த நாவலின் கதாபாத்திரங்கள் கிராமங்களெனும் ராட்சத தேனடையில் வழிந்து விழுந்த ஒரு துளி தேன் தான்.
இந்த நாவல் மூலமாக கிராமத்தின் வாழ்வியலை சிதைக்க முற்படவில்லை. கிராமத்து மனிதர்களின் அறியாமையை கேலிக்கு உட்படுத்த விரும்பவில்லை. கிராமத்து மக்களின் நம்பிக்கைகளை அசைத்து பார்க்கும் எண்ணமுமில்லை.
மேலிருந்து பார்த்து ரசிப்பவனுக்கு கிணற்றின் அழகியல் தான் தெரியும். அதனுள் சிக்கி போராடுபவனுக்கு தான் கிணற்றின் ஆழமும், அடர்த்தியும் புரியும். அந்த வகையில் இந்த நாவல் கிராமத்தின் இருதரப்பையும் உங்களுக்கு காட்டிவிடுமென நம்புகிறேன்.
கிராமத்தின் அழகியலை ரசித்து கொள்ளுங்கள். கூடவே, அதனுள் பின்னிப் பிணைந்திருக்கும் ரணங்களுக்கு சற்று செவி சாயுங்கள்.