உடுமலை கி. ராம்கணேஷ்
முனைவர் கி. ராம்கணேஷ் ( உடுமலை கி. ராம்கணேஷ் ) , அவர்கள் உடுமலையில் பிறந்த தமிழ் மாலை. சரளமான இலக்கண நடை, இலக்கிய அறிவு ஆகியவற்றால் காண்போரை வியக்க வைக்கும் சிறப்பாளர். பல்வேறு பள்ளி, கல்லூரி, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வ நிறுவனங்கள் நிகழ்த்தும் மேடைகளில் சிறப்பு விருந்தினராக உரை நிகழ்த்துபவர்.
புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலங்களில் இவரின் புத்தக வாசிப்பு ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. சாதாரணமாக உரையாடும்போதும் எந்தப் பேச்சாக இருந்தாலும் தமிழ் இலக்கியச் சான்றுகளோடு உரையாடும் திறமை வியக்க வைக்கிறது.
சிறந்த பேச்சாளர் என்னும் தளத்தில் மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் எழுத்துலகிலும் தம்மை நிரூபித்து வருகிறார். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
தனியார்ப் பள்ளிகளில் ஐந்தாண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளார். மதுரைமணி நாளிதழ், திருக்கோயில் மாத இதழ், குருகுலத்தென்றல் மாதஇதழ், கவிச்சூரியன் மின்னிதழ், கல்கி இதழ், தி இந்து - காமதேனு இதழ், விஜயபாரதம் இதழ், வல்லமை மின்னிதழ், பதிவுகள் மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தினமணி நாளிதழ், அருளமுது இதழ், இகரமுதல்வி இதழ், காற்றுவெளி மின்னிதழ், கணையாழி மாத இதழ், , பாவையர் மலர் மாத இதழ், கீற்று மின்னிதழ், தமிழ் டாக்ஸ் மின்னிதழ், புன்னகை இதழ், கொலுசு மின்னிதழ், குமுதம் - தீராநதி இதழ், ஆன்மிக மலர் மெயில் புக், தென்றல் மின்னிதழ் ( அமெரிக்கா ), ஆப்பிரிக்கா தமிழ்ச்சாரல் ( கின்சாசா ), சஹானா மின்னிதழ், பொம்மி சிறுவர் மாத இதழ் ஆகியவற்றில் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உதவியுடன் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இவரது “வைணவம் வளர்த்த தமிழ்”, “ சுருக்கம் தேடும் விரிந்த கவிதைகள்”, சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆண்டவன் அடித்த மொட்டை ( கவிதை நூல்- அமேசான் கிண்டில் ), நெய்தலகமும் தும்பைப்புறமும் ( ஆய்வு நூல் ) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். பள்ளிகளில் பணியாற்றும் காலத்தில் மனிதஉரிமை, சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
மதுரை, பாரதி யுவ கேந்திரா நிறுவனம் சிறந்த மாணவருக்கான ‘சுவாமி விவேகானந்தர்’ விருது வழங்கியுள்ளது. இவர் படைத்த கவிதை நூல் ஒன்றிற்கு ‘திருப்பூர் இலக்கிய விருது’ பெற்றுள்ளார்.