திருநங்கை கல்கி சுப்ரமணியம் பன்முகத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளி. சமூக செயற்பாட்டாளர்., ஓவியர், கவிஞர் இன்னும் நிறைய அடையாளங்கள் கொண்டவர் . Renaissance woman என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அப்படித்தான் கல்கியும். இணையத்தில் கவி எழுதி வந்த அவரின் முதல் முயற்சி ‘குறி அறுத்தேன்’ கவிதை நூல். அதன் இரண்டாம் பதிப்பாய்ததான் நீங்கள் இப்போது வாசிக்கிறீர்கள். ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் வல்லமை பெற்ற கல்கி, திருநங்கை சமூகத்தின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைத்தவர். இன்று திருநங்கைகள் கல்வியிலும், அரசு வேலையிலும், திரைக்கலைஞர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களிலும் தடம்பதித்து மெல்ல மெல்ல முன்னேற சட்ட மற்றும் சமூக ரீதியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட திருநங்கைகளில் கல்கி முக்கியமான செயற்பாட்டாளர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய முதல் தமிழ் திருநங்கை. இந்திய சினிமாவின் முதல் திருநங்கை கதாநாயகி.
இரண்டாம் பதிப்பு வருவதற்கு முன்பே இந்நூலின் கவிதைகள் பல கல்லூரிகளில் பாடமாக்கப்பட்டுள்ளது. இந்நூலின்வழி வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி. இவர் மாகாளியிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது. விதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் முடையும் வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார். மனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன.
மாற்றுப்பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக, அரிதினும் அரிதான வரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி. அவரது வரிகள்.. . சாட்டையாய்... கொள்ளிக்கட்டையாய்... பக்கத்தைப் புரட்டுங்கள். திருநங்கைகளின் வாழ்வை உணருங்கள்…