“இசை ரசனை மக்களிடத்தே மாறுகிறபோது,அங்கே கலாச்சாரம் மாறக்கூடும்”, 2300 வருடங்களுக்கு முன்பாக தன் உள்ளுணர்வின் மூலம் இச்சிந்தனையை தருவித்துள்ளார் பெருமகனார் அரிஸ்டாட்டில். ”உன்னை அறிந்தால்” இவ்வுலகம் உன் வசப்படும், என்று உரைத்துள்ளார் அரிஸ்டாட்டிலின் ஆசிரியரான சாக்ரடீஸ், ஆட்சி செய்பவன் “தத்துவஞானியாக” அமைந்தால் நாட்டிற்கு சிறப்பு என்று எடுத்துரைத்துள்ளார் பிளாட்டோ. இவ்வுலக மக்கள் “எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க பெற வேண்டும்” என அரை கூவல் விடுத்துள்ளார் “கேப்பிட்டல்” எழுதியுள்ள மார்க்ஸ். ”நாகரீக வளர்ச்சியானது மனிதத்தை அழிக்கக் கூடிய கருவியாக விளங்குகிறது என சாடுகிறார் “சமூக ஒப்பந்தம்” அருளிய ரூசோ.இவ்வாறான சிந்தனையோட்டங்கள், மனிதர்களை மட்டுமல்லாது, உலக சமூக பொருளாதார அரசியல் அமைப்புகளையும் செம்மைப்படுத்தியுள்ளது. பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள இப்படைப்பு, அறநெறி மாற்றுச் சிந்தனைகள் மாணவரிடத்தே பிறப்பதற்கும், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அர்த்தசாஸ்த்திரம் போன்ற வியக்கத்தக்க கிழக்கத்திய சிந்தனைகள் இருந்தபோதிலும், மேற்கத்திய சிந்தனைகள் பல பாடங்கள் தனித்தன்மையாக உருவாவதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மாணவ சமூக அறிவு தேடலுக்கும், வேலை வாய்ப்புக்கும் இப்படைப்பு பயனளிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.