கைவிடப்பட்ட குமாரரர்களுக்கு மரணமே பரிசாக கிடைத்தது. இறைமகனுக்கே எந்த வாக்குறுதியும் தராமல் தான் பூமிக்கு அனுப்பிவைத்தார் இறைவன். விண்ணரசு என்பதை இன்றும் கூட நாம் தவறாகத்தான் புரிந்து கொள்கிறோம். பூலோக ராஜ்ஜியம் மட்டுமே மனிதர்களுடையது. அன்று யூதர்களின் ராஜாவானவர் இன்று உலகிற்கே ராஜாவானார். நபிகளை மெக்காவிலிருந்து கல்வீசித் துரத்தியவர்களெல்லாம் இன்று எங்கே சென்றார்கள். உலகிற்கே மறுமலர்ச்சி ஏற்படுத்திய புத்தரை அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் தூற்றத்தானே செய்தார்கள். மக்களுக்கு பாவத்தை மன்னிப்பதற்கு மட்டுமே கடவுள் தேவையாய் இருக்கிறார். வான மண்டலத்திலிருந்து இனி யாரும் இறங்கி வரப்போவதில்லை நீங்கள் என்ன செய்வீர்கள். இந்த பூமித்தடாகத்தில் இயேசு, புத்தர், நபி போன்ற வெண்தாமரைகள் அவ்வப்போது மலரத்தானே செய்கிறது. உங்களை அனுப்பினவரை விசுவாசிக்க மனமில்லாதவராகத்தானே இருக்கிறீர்கள். அதிமனிதன் தோன்றி உங்களுக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் நீங்கள் தூங்கிவிட்டீர்கள். அவர்களின் சொற்களில் வெளிப்பட்ட உண்மை உங்களைக் கோபம் கொள்ளச் செய்தது. சுவர்க்கத்தின் திறவுகோலை அவர்கள் வைத்திருந்தனர். நீங்களோ அவர்களைத் துரத்தியடிப்பதிலேயே குறியாய் இருந்தீர்கள். எத்தனையோ மீட்பர்கள் வந்து சென்று விட்டார்கள். பூமியிலிருந்து தப்பித்து அடைக்கலம் தேடுவோரின் மீது இரக்கம் கொண்டு மெசியா விண்ணுலகில் அழுது கொண்டிருக்கிறார். இதோ ஒரு அறைகூவல் விடுக்கிறேன் சுவர்க்கத்திலிருந்து விரட்டப்பட்டது போன மனித இனம் பூமியிலிருந்து விரட்டப்படும் நாள் வெகுதொலைவிலில்லை. நோவாவுக்கு மட்டுமே தெரியும் இறுதித்தூதர் யாரென்று. மூழ்கிக் கொண்டிருக்கும் பூமிக்கப்பலில் இருந்து கொண்டு யார் பூபாளம் இசைத்துக் கொண்டிருப்பது.
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம், பதாகை ஆகிய இணைய இதழ்களிலும், படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. சிறுகதைகள்.காம்ல் இவரது சிறுகதைகள் படிக்கக் கிடைக்கும். தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.