முன்னதாக பாமரனுக்கான பாதுகாப்பு சட்டங்கள் என்கிற பெயரில் சட்டம் தொடர்பான ஒரு புத்தகம் எழுதி இருந்தேன், அதற்கடுத்ததாக மறைக்கப்பட்ட இந்தியாவின் மறுபக்கம் என்கிற வரலாற்று தரவுகளுடன் கூடிய ஒரு ஆய்வு புத்தகம் எழுதி வெளியிட்டேன். தற்போது, இன்றைய காலகட்டத்தில் வெளியான புதிய தீர்ப்புகள், மற்றும் புதிய சட்டங்களின் அடிப்படையில் இப்புத்தகத்தினை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் முக்கிய நான்கு தூண்களான, சட்டமியற்றும் மன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை, பத்திரிகை துறை இன்றும் பழுதடையாமல் ஜனநாயகத்தை நாளும் வளர்ச்சியடைய செய்து, முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
சட்டமியற்றும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் போதும், நீதியை நிலைநாட்டும் எண்ணம் கொண்டோர் நீதிமன்றத்தில் தீர்ப்புகளைப் பகரும் போதும், நேர்மையான நிர்வாகிகள் நிர்வாகம் செய்யும் போதும், உண்மையின் ஊற்றுக் கண்களாக இருந்து, சமூக அக்கறை உள்ளவர்கள் பத்திரிகை துறையிலிருந்து, மக்களின் மனசாட்சியாக இருக்கும் போதும் ஜனநாயகம் என்றும் நெறிபிறழாது செழித்தோங்கும் என்பது வரலாறு காட்டும் உண்மை.
நீதித்துறை, குரலற்றவர்களின் குரலாக விளங்கி, வழங்கும் தீர்ப்புகளிலிருந்து, நாட்டின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், கொள்கைப் பிடிப்புகளுக்கும், ஏழை, எளிய மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, அவர்களின் வாழ்க்கையில் கிஞ்சித்தும் பாதிப்பு வராமல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், நெறி பிறழாமல் தீர்ப்புகளை வழங்கி நம் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறது,