காதலைப் பற்றி நாம் எழுதுவதெல்லாம் காற்றை சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும். கடவுளை அறிய முடியாது உணரத்தான் முடியும் என்பது போல. காதல் ஒரு உணர்வு. பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது அந்த அழகை நாம் ரசிக்கலாம் ஆனால் அதை அடைய முயற்சிக்கக் கூடாது. இயற்கை தான் பெண்ணாக, மலராக, நதியாக, கடலாக உருவெடுத்து நம் முன் வேடிக்கை காட்டுகிறது. பிரிவின் போது கசியும் கண்ணீர்த்துளிகள் தான் காதலை புனிதப்படுத்துகிறது. காதல் நமக்கு சிறகை தருகிறது வானை அளக்க ஆனாலும் பலபேர் தாழத்தான் பறக்கிறோம். விடியல் உறக்கமற்றதாக விடிகிறது, உன்மத்தமாக இருப்பதால் பசி மறக்கிறது. இப்படி உன்னையே அசைத்துப் பார்க்கும் காதலைப் பற்றி நீங்கள அறிந்து கொள்ள வேண்டாமா. அதற்கு நீங்கள் காதலித்துப் பாருங்கள். அன்பின் மகத்துவத்தில் நீங்கள் ஆட்கொள்ளப் படுவீர்கள்.
தோற்றவர்களின் காதல் வரலாறு ஆகிறது. காதலின் சின்னமாக கல்லறையே இருக்கிறது. நிராகரிக்கப்பட்டவனின் ஆன்மா இந்தப் பூமியையே சுற்றிச் சுற்றி வருகிறது. அவளது பார்வைக்கு எத்தனை மகத்துவம் என்பது கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்பவனுக்குத் தான் தெரியும். இப்பூமியில் புனிதம் கெடாத ஒன்று உண்டென்றால் அது காதல் தான். மனித வாழ்வில் உன்னதமான தருணம் காதல் வயப்படுவதே. காதலின் மகத்துவத்தை வர்ணிக்க அகராதியில் வார்த்தைகளே கிடையாது. காதல் நதியில் மூழ்கியவர்கள் நிச்சயமாக கரை சேருவார்கள். இத்தொகுதி பாதிக்குமேல் காதலைப் பற்றியே பாடுகிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.