ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.
1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர் என்று அழைக்கப்பட்டவர்.
பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.
இவர் எழுதிய முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1969வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி என்னும் மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஒர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் முதல் தொடர்கதை வெளியானது, நாவலின் தலைப்பு ஏழாவது டெஸ்ட் ட்யூப்.
1980ல் தென்றல் காற்றாய் ஆரம்பித்த இவரது எழுத்துப் பயணம் பிறகு வந்த கால கட்டங்களில் ஒரு புயலாய் சுனாமியாய் மாறி எழுத்துலகையேப் புரட்டிப்போட்டு ஒரு புரட்சியை செய்தது. 1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில் 41 மாத நாவல்கள் வெளிவந்தன. அந்த 41 மாத நாவல்களிலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.
இவர் எழுதிய 1000மாவது நாவல் குமுதம் வார இதழில் டைனமைட் 98 என்ற தலைப்பில் வெளிவந்தது. பிறகு வந்த அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 500 நாவல்கள் எழுதி தனது இலக்கை உயர்த்தினார்.
இவருடைய நாவல்களை மேலோட்டமாய் படித்தால் குற்றவியல் நாவல்களைப்போல் தோன்றினாலும் நாவலைப் படித்து முடிக்கும்போது முக்கியமான பல விஞ்ஞான விஷயங்களையும் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான நாவல்கள் அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவதால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள், ராஜேஷ்குமாரின் நாவல்களை இணையத்தளத்தில் தேடி மின்புத்தகங்களாகவும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒலிப் புத்தகங்களாகவும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர் கடந்த 50 வருட காலமாக எழுதுவதால் 20 வயது முதல் 80 வயது வரையிலான வாசகர்கள் இவருக்கு இருப்பது இன்னொரு பெருமைக்குரிய விஷயம். அதிலும் இவர் எழுதியுள்ள நாவல்களில் 30 சதவீதம் சமூக நாவல்களும், குடும்ப நாவல்களும் அடக்கம் என்பதால் குடும்பத் தலைவிகள் டி.வி.சீரியலுக்கு இணையாக இவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள். இன்றளவும் இவருடைய சமுக நாவல்களில் அதிகம் பேசப்படுகின்ற ஐந்து நாவல்கள் இரண்டாவது தாலி, முள் நிலவு, முதல் பகல், ஒரு துளிக்கடல், பாதரசப்பறவைகள்.
தமிழில் தினத்தந்தி நாளிதழ் வந்த பிறகுதான் பலர்க்கு தமிழ்மொழி சரியாக பேச வந்தது என்று சொல்வார்கள். அதேபோல்தான் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்கள் படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருந்ததால் பாமர வாசகர்களும் வாங்கிப் படித்தார்கள். இதில் உள்ள இன்னொரு வியப்பான விஷயம் என்னவென்றால் பாமர வாசகர்களுக்கு பிடித்த அதே நாவல்கள்தான் காவல்துறை அதிகாரிகளாலும், மருத்துவர்களாலும், வழக்கறிஞர்களாலும் படிக்கப்பட்டன என்பதுதான்.
இலக்கியமாக எழுதும் எழுத்தாளர்கள் என்று சிலரால் முத்திரை குத்தப்பட்ட எழுத்தாளர்கள் கூட ராஜேஷ்குமாரின் நாவல்களைப் படித்துவிட்டு இது பொழுது போவதற்காக படிக்கப்படும் நாவல்கள் அல்ல என்றும் அகண்ட வாசிப்புக்கு வழிகாட்டும் புத்தகங்கள் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்கள். அவரது எழுத்துதுறைக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை சாதனை என்று பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு தமிழில் அதிக படைப்புகளை படைத்தவர் என்ற அங்கிகாரம் அளித்துள்ளது. இது ராஜேஷ்குமார்க்கு கிடைத்த உச்சபட்ச விருதாகவே எடுத்துக் கொள்ளலாம்.
இவருடைய பெரும்பாலான சிறுகதைகளும், நாவல்களும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளிலும், ப்ளாஃப்ட் பப்ளிகேஷன் மூலம் சில நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.
எழுத்தாளர் ராஜேஷ்குமார்க்கு கிடைத்து இருக்கக்கூடிய இன்னொரு சிறப்பு அவருடைய நாவல்கள் சிலவற்றை பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பி.எச்.டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பதுதான்.
இவருடைய நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாக தயாரிக்கப்பட்டு புத்தக வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களையும் போய் சென்றடைந்துள்ளது.
இவருடைய 250க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரு தொலைக்காட்சியில் சின்னத்திரை சினிமா என்ற தலைப்பில் வாரந்தோறும் இரண்டு மணி நேரம் 2013ம் ஆண்டிலிருந்து 2018 ஆண்டு வரை ஒளிபரப்பாகி தொலைக்காட்சித் துறையை வியப்படைய வைத்தது.
திரைப்படத்துறையிலும் இவர் தன்னுடைய முத்திரையைப் பதிக்க தவறவில்லை. இவருடைய நாவலான குற்றம் 23 திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சினிமா வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தாலும் இவர் பெரிதும் விரும்புவது எழுத்துத்துறையைத்தான். 1500 நாவல்களைத் தாண்டியும் எழுத வேண்டும் என்பதுதான் இவருடைய விருப்பம்.
இவரின் சாதனையைப் பாராட்டி 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது தந்து சிறப்பு செய்துள்ளது. அதை தவிர சர்வதேச அரிமா சங்கம் இவர்க்கு வாழ்நாள் சாதனையாளர் (LIFE TIME ACHIEVER AWARD) விருதும், சிறந்த த்ரில்லர் படைப்புகளுக்காக சர்வதேச விருதான CLR விருதும் வழங்கப்பட்டுள்ளது.