ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை.
பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர், அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின் முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.
1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில் 41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.
இவரது எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.
சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.
இவருடைய நாவல்கள் பல திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.