வணக்கம், என் பெயர் சுஜாதா நடராஜன். கணவரின் பெயர் நடராஜன். அழகாக இரண்டு மழழை செல்வங்கள்.
எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். சிறுவயது முதலே நிறைய கதைகளை விரும்பி படிப்பேன். மாயாவியில் ஆரம்பித்தது என் படிக்கும் ஆர்வம். அது அப்படியே வளர்ந்து வந்தது என் பள்ளிபடிப்பு முடியும் வரை. நிறைய எழுத்தாளரின் படைப்புக்களை படித்துள்ளேன். அது சிறிய கதையாக இருந்தாலும் சரி... பாடபுத்தகத்தில் வரும் கதைகளாக இருந்தாலும் சரி.. விரும்பி படிப்பேன்.
அதன் பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டது. புத்தகம் படிக்க நேரம் வாய்க்கவில்லை. நிறைய கடமைகள் பொறுப்புக்கள் இருந்தன. அதை எல்லாம் ஓரளவு நிறைவு செய்து விட்டு, இப்போது எமக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை மேலோங்கியது. அப்போது தான் கதை எழுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த கதைக்கு நிறைய வரவேற்பும் வாசகரிடம் இருந்து வந்தது. அதுவே என்னை மேலும் ஊக்கப்படுத்தி எழுத தூண்டியது. அந்த வாசக நண்பர்களுக்கும், என்னை ஊக்கபடுத்தும் என் அன்பு கணவருக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இது என்னுடைய முதல் படைப்பு. இந்த கதையில் நாயகன் சிவா நாயகி அனு இருவரும் எதிர்பாராமல் திருமண பந்தத்தில் இணைகின்றனர். அதன்பின் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் மூலம் இருவருக்கும் ஏற்படும் புரிதலை கூறும் கதைகளம். அதை அவர்களின் குடும்ப உறுபினர்களுடன் சேர்த்து சந்தோஷமாக கூறமுயன்றுள்ளேன். கதையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கூறவும். நன்றி.