ஆறுமுகன் கடவுளர்களின் கடவுள். முருகா என்று அவன் நாமத்தை உச்சரித்தாலே பக்தன் மனம் பரவசமடையும். எத்திசை நோக்கி வேண்டுமானாலும் வணங்கலாம் அவன் எங்குமிருக்கிறான். கந்தன் தமிழில் வைதாரையும் வாழவைப்பான். காடு மலைகளில் முனிவர்கள் தேடி அலைவது தத்துவப்பொருளான முருகனைத்தான். முருகன் பரப்பிரம்மம், இந்தப் பிரபஞ்சத்துக்கே அதிபதி. அவன் அழைக்காமல் தானாக யாரும் பழனி செல்ல முடியாது, வேலனைக் காண வேளை வரவேண்டும். சத்தியத்தின் வழி நடப்பவர்கள் அவனிடம் சரணடைந்துதான் ஆகவேண்டும். தெய்வக்குழந்தை கிரகங்களையெல்லாம் பளிங்கு போல் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அக்குழந்தைக்கு. அடியவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து தமிழில் பாடச் சொல்லிக் கேட்கும். பக்தனுக்கு ஏதாவது ஒன்றென்றால் தான் கடவுள் என்பதைக்கூட அக்குழந்தை மறந்துவிடும். ஆதியில் இருந்தே முருகக்குழந்தை இங்கு தான் இருந்து வருகிறது. பிறவா நிலையை அடைந்தவர்களை அக்குழந்தைதான் மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.