பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு மிஷனெரி பணியாற்ற வந்த அயல் நாட்டவர் இங்கு உள்ள மக்களுடன் இணைந்து செயல்பட்டாலொழிய வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, இங்கு மக்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொண்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, மருத்துவ மனைகள், பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தனர். சமூகத்தில் புரையோடிப்போன அவலங்களைக் களைந்து, பசி பட்டினியால் வாடிய மக்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவினர். பெண் குழந்தைகள், மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தினர். இப்படி இந்தியாவில் அரும்பணியாற்றிய அயல்நாட்டவர் எண்ணற்றவர் இருந்தாலும், பன்னிருவரை மட்டும் தேர்வு செய்து இந்நூலில் நினைவுகூரப் பட்டுள்ளது.
இளம் வயதிலேயே தங்களை அருட்பணிக்கென்று அர்ப்பணித்துக் கொண்டு, எங்கோ பிறந்து, நம் நாட்டிற்கு வந்து அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் ஆண்டவருக்கென்றும் இந்நாட்டிற்கும் அரும்பணியாற்றிய பெருமை அவர்களுக்கே உண்டு. அவ்வகையில், அம்மா ஏமி கர்மைக்கேல், அன்னை தெரேசா, ஐடா ஸ்கட்டர், சகோதரி நிவேதிதா, ஜாய்ஸ் உல்லார்டு, சிஸ்டர் சாரா டக்கர், பென்னிகுயிக், அருள்திரு. சீகன் பால்க், ரோமலஸ், வில்லியம் கேரி, வீரமாமுனிவர் மற்றும் பேரருள் திரு. கால்டுவெல் ஆகியோர் இங்கு நினைவு கூரப் படுகிறார்கள்.