 
                        
                        மரணமே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. நாளையைப் பற்றி நம்மால் முடிவு செய்ய முடியாது. வாழ்க்கை விடுகதைக்கு விடை தேடத்தான் நாம் இங்கு பிறந்திருக்கிறோம். இயற்கை நம் இருப்பை ஏற்றுக்கொள்ளும்வரை தான் நாம் இங்கு வாழ முடியும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறாத வேத நூல்களே இல்லை. வாழ்க்கை கடலில் ஜென் எனும் பாய்மரத்தை விரித்து கரையை அடைந்துவிடலாம். உலகமெனும் சேற்றிலிருந்து ஜென் நீர்ப்பூவாக உயர்ந்து நிற்கிறது. ஜென் மரணத்தை மையப்படுத்துகிறது. மரணத்தைப் பற்றிய சிந்தனையே நமக்கு ஞானத்தை வழங்குகிறது. பகலும் இரவும் ஒரே மாதிரியாக கடந்து செல்கிறது. நடக்கும் செயல்கள் வெவ்வேறாக இருக்கிறது. பூமி எனும் சிக்கலான இயந்திரத்திலிருந்து ஜென் விடுதலை தருகிறது. புத்தர் முயற்சியைக் கைவிட்டதும் ஞானம் அடைந்ததைப் போல. வானத்திலிருந்து மழைத்துளி பூமியை வந்தடையும் நேரம் கூட ஆகாது நீ ஞானமடைய என்கிறது. ஜென் மரணத்தை வாழ்க்கையின் ஒருபகுதி என்கிறது. ஜென் வாழ்வை நாம் கொண்டாடுவது போல மரணத்தையும் கொண்டாட வேண்டும் என்கிறது. புல், பூண்டுகள் வாழ்வின் மகத்துவம் அறியாதவை. உலகில் பிரவேசிக்கும் மனிதன் தனக்கு அடுத்து வரும் சந்ததியினர் தம்மைப் பற்றி பேசுமளவுக்கு காரியம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் அவனுக்கும எந்த வித்தியாசம் இல்லை.