விலைமதிப்பில்லாத புராதன பொருள் ஒன்று, மூன்று தலைமுறையைக் கடந்து, அதை அபகரிக்க முயற்சிப்பவனிடமிருந்தும் தப்பித்துச் செல்கிறது. அது செல்கின்ற வழியில் எத்தனைத் துயரங்கள்…! மரணங்கள்…! ராணுவ பணியில், ஒரு விபத்தில் ஏற்பட்ட கால் ஊனத்தால் ஓய்வு பெற்று அத்திமேடு வருகிறான் ராகவன். அடுத்த பதினைந்து வருடங்களில் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்தான அனுபவங்கள், அவன் தனிமை வாழ்க்கையை சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் மாற்றி, அர்த்தமுள்ளதாக ஆக்கியதுதான் கதை. பூங்குழலி என்ற ஏழைக் குழந்தையை, தேயிலை ஆலையில் வேலைக்கு அனுப்புவதைத் தடுத்து, தன்னுடைய பொறுப்பில் படிக்க வைத்து, அவளை ஒரு I.A.S அதிகாரியாக ஆக்குவதை லட்சியமாக கொண்டு ஆரம்பிக்கிறான் ஓய்வு வாழ்க்கையை. ஆனால் அதே பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு வயதை நெருங்கிய மலைமாயன் என்ற ஒரு கோரமான கிழவனின் தொடர்பு, அவன் வாழ்க்கையை பலவிதமான சோதனைகளுக்கு ஆளாக்கி, விசித்திரமான அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன் இடையே அவனுக்கு ஒரு மென்மையான காதலும் கூட. பல சிக்கல்களைக் கடந்து கடைசியில் தன் லட்சியத்தை அடைந்த பொழுது, தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பிரிந்து சென்றுவிட, ராகவன் ஊன்றுகோலுடன் தனி மரமாகின்றான். அவனுக்கு யார் துணை? அந்தப் புராதன பொருள் என்ன ஆனது…?