குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வாழ்க்கையின் நெருக்குதல்கள் மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை. தோன்றும் கனவுகள் கூட அனாதையாகத்தான் அவனை அலையவைக்கின்றன. அவனுக்கான வாழ்க்கையை யாரோ நிர்ணயிப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் உதைபடும் பந்தாய் அவனை இங்குமங்குமாய் அலைக்கழிக்கிறது இந்தச் சமூகம். உள்ளவன் முன்பு இல்லாதவன் பொம்மை தானா? சிரித்துப் பேசுபவர்களெல்லாம் உதவி என்று கேட்டு நிற்கும்போது உதாசீனப் படுத்துவதை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அவனுடைய முதுகின் மீது கால் வைத்து முன்னுக்கு வந்தவர்களெல்லாம் அவனை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. வல்லமை உள்ளதே பிழைக்கும் என்பது இந்த உலக இயக்கத்தைப் பொறுத்தவரை உறுதியாகின்றது. கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்க்கை சிலுவையாகத்தான் கனக்கிறது. வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகளை இன்று வரை காணமுடியவில்லை. அந்தகாரம் கவிந்த இவ்வுலகில் அவன் விடுதலை அளிக்கும் ஒன்றாக மரணத்தை நினைப்பது தவறா?
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. ஐந்தாவது கவிதை தொகுப்பாக சாத்தானின் வேதம் 2019 ஜூலை மாதம் வெளிவந்தது இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.