இந்த வாழ்வு மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது. ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போது மனிதன் துயரப்படுக்கையில் விழுகிறான். நம்பிக்கை விதைகள் ஒருநாள் முளைவிடும் என்பது மனிதனின் கனவு தான். ஆயுள் முழுவதும் எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்க மனிதனால் முடியாது. வாலிபத்தில் சுவர்க்கமாக தெரிந்த உலகத்தில் போகப் போக நரக இருள் கவிகிறது. மனிதன் தான் ஒரு பாவப்பிறவி என்பதை உணர்கிறான். அவனுக்கு மன்னிப்பு தேவையாய் இருக்கிறது. உயிர்களெல்லாம் பிறப்பு இறப்பு என்ற இரு எல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உடலின் தேவையை பூர்த்தி செய்வதால் தொடர்ந்து துன்பத்தையே பரிசாகப் பெறுகிறோம். வாழ்வின் அர்த்தத்தைத் தேடியவர்களின் முடிவு கொடுமையானதாகவே அமைந்துள்ளது. உண்மையின் வழியைப் பின்பற்றுபவர்கள் சொற்பமெனினும் அவர்களுக்கு எதன் தரிசனம் கிடைத்ததென்று தெரியவில்லை. முடிவு விடுதலையளிக்கும் என்பதால் தான் மனிதன் துயரங்களைப் பொறுத்துக் கொள்கிறான். கடவுளின் அகதரிசனம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் குறைவு தான். அற்பமான சுகத்தை அனுபவிக்கும் ஆசைதான் மனிதனை வலையில் சிக்க வைக்கிறது. பாவிகளின் கூடாரத்தில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர். கடவுள் நிழல் கூட விழாத கைவிடப்பட்ட இவ்வுலகத்தில் மீட்பு சாத்தியமில்லாதது. உடலுக்குள் சிறையிருப்பது மரணத்திற்குப் பின் விடுதலை பெறுகிறது. அதுவும் சிறிது காலமே, பிறகு அது பிறவி சுழற்சியில் சிக்கிக் கொள்கிறது. விதி ஒன்று இந்த உலகில் செயல்படுவதாக நீங்கள் எப்போதேனும் உணர்ந்து கொண்டால் அதுவே கடவுள்.
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம், பதாகை ஆகிய இணைய இதழ்களிலும், படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. சிறுகதைகள்.காம்ல் இவரது சிறுகதைகள் படிக்கக் கிடைக்கும். தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.