இரண்டாம் உலகப்போர் என்பது வெறும் தேதிகள் மற்றும் போர்க்களங்களால் ஆனது மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மனிதர்களின் கண்ணீராலும், எதிர்பாராத தியாகங்களாலும் எழுதப்பட்டது. அதில் காலத்தின் அலைகளால் மறைக்கப்பட்ட, அதே சமயம் மறக்கவே கூடாத ஒரு பக்கம்தான் 'திலவா' (SS Tilawa) கப்பலின் வரலாறு.
1942-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் உக்கிரத்தில், ஆயிரக்கணக்கான பயணிகளுடன் மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்கா நோக்கிப் பயணித்த 'எஸ்.எஸ். திலாவா' கப்பல், ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு கடலில் மூழ்கியது. 'இந்திய டைட்டானிக்' என்று அழைக்கப்படும் இந்த விபத்தில் மறைக்கப்பட்ட ஒரு ரகசியம், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மௌனமாகப் பாதுகாக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வல்லப தேவன், தன் வாழ்நாளின் கடைசி ரகசியத்தைச் சொல்ல துடித்தபடி கோத்தகிரியின் பனிமூட்டத்தில் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனது மகள் சீதா, தன் பிறப்பைப் பற்றிய உண்மையை அறிய, தன் காதலன் உமருடன் இணைந்து ஒரு நீண்ட தேடலைத் தொடங்குகிறாள். ஒரு பழைய ட்ரங்க் பெட்டி, ஒரு சிவப்புச் சீலை, மற்றும் ஒரு வெள்ளி லாக்கெட்... இவை அவளை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன?
வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நுணுக்கமான ஆய்வுகளின் அடிப்படையில் செதுக்கப்பட்ட இந்த நாவல், போரின் கோரத்தையும், ஒரு தாயின் ஈடுஇணையற்ற தியாகத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது.