பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்த வாசகர்களுக்கு இன்று வரை பல கேள்விகளுக்கு விடையே இல்லை அதில் நந்தினியின் தந்தை யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? போன்ற பல கேள்விகள் இதில் அடங்கும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பதில் சொல்வார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில் தான் கொற்றவை மகள் புதினத்தில் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் இரணதீரன் பிரசன்னா.
பொன்னியின் செல்வன் புதினம் வரலாற்றுப் புனைவாக இருந்தாலும் பிற்கால சோழப் பேரரசில் நிகழும் சில வரலாற்றுச் சம்பவங்களை பல வரலாற்று கதாப்பாத்திரங்களை கொண்டு அமைத்திருந்தார் அமரர் கல்கி. இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் தான் செப்பு பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இந்தக் வரலாற்று மர்மத்தை தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். அதே போல ஆதித்த கரிகாலரின் கொலை சம்பத்தை சுற்றி நடக்கும் அரியணை ஆட்டமாக தான் இந்த கொற்றவை மகள் புதினமும் பயணிக்கிறது. பொன்னியின் செல்வனின் நான்காம் பாகமான மணிமகுடத்தின் ஆதித்த கரிகாலர் கொலை சம்பவத்தில் இருந்து தொடங்கும் இந்த கொற்றவை மகள் புதினம் வந்தியத்தேவன் சிறை பிடிப்பு, கொற்றவை மகள் வருகை, பூங்குழலியின் இலங்கை பயணம், நந்தினியின் சூழ்ச்சி, குந்தவையின் திட்டம், வளையாபதியின் சாகசம், ஆழ்வார்கடியனின் மதுரை விஜயம், இலங்கை மன்னனின் முற்றுகை, சேர மன்னனின் பயிற்சி பட்டறை, ஒற்றனின் கொலை மற்றும் சோழர்களின் போர் என்று நீள்கிறது.