வழக்கமான ஒரு மாலை நேரத்து அரட்டைக் கச்சேரியில் நண்பர்களிடையே இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு. நம்மாழ்வார் அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர் மரங்களுடன் பேசி பட்டுப் போகும் தருவாயில் இருக்கும் மரத்தையும் மீண்டும் துளிர்க்க வைப்பார் என்று நண்பர் ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஓ என அலட்சியமாக சிரித்தனர். அந்த அலட்சியம் எனக்கு கோபத்தை வரவழைத்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் மரத்துடன் பேசுவது அப்படி ஒன்றும் மாபெரும் குற்றம் இல்லையே?”
“குமாரு அப்படி யாராவது மரத்தோட பேசிக் கொண்டிருக்கிறதை ஊர் உலகம் பார்த்தால் அடிக்கிற வெயிலுக்கு மறை கழண்டுடிச்சோனு நினைச்சு கைகட்டி சிரிக்கும்” மீண்டும் சிரிப்பு தொடர்ந்தது.
“இந்த உலகம் எதை பார்த்து தான் சிரிக்காது? ஒருத்தன் நின்னா சிரிக்கும் நடந்தா சிரிக்கும் தடுமாறி விழுந்தால் கைதட்டி சிரிக்கும். விழுந்தவன் வேறு கொண்டு எழுந்தால் ஆச்சரியப்பட்டு சிரிக்கும். இந்த சிரிப்புக்கு பயந்து எந்த காரியமும் செய்யாமல் நம்மைப் போன்றவர்கள் முடங்கி கிடப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?” என் குரலில் இருந்த உண்மை உரைக்க சிரிப்பொலி அடங்கியது.
தையல் இயந்திரம் போன்று ஒரு மிஷினுக்கு ஒருவர் என்று தனித்து அமர்ந்து வேலை செய்யும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் பல சமயங்களில் இயந்திரத்தோடு அவர்களை அறியாமலேயே பேசுவது உண்டு. கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பழுது நீக்க முடியாமல் திண்டாடும் மெக்கானிக்குகள் ஒவ்வொருவரும் கடைசியாக ஏதாவது ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இயந்திரத்தை ஸ்பேனரால் தட்டி பேசியே தீர்வார்கள்..